பெங்களூருடன் இன்று மோதல் பழிதீர்க்குமா ராஜஸ்தான்?
பெங்களூருடன் இன்று மோதல் பழிதீர்க்குமா ராஜஸ்தான்?
மும்பை:ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரை வீழ்த்தி ராஜஸ்தான் பழியை தீர்த்துக்கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2022 ஐபிஎல் தொடரில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் எடுத்து பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. கொல்கத்தா, டெல்லி அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 200 ரன்களுக்கு மேல் குவித்து அமர்க்களப்படுத்திய ராஜஸ்தான் அணியில் பட்லர் பட்டையை கிளப்புகிறார். அவர் 7 ஆட்டங்களில் 3 சதம், 2 அரைசதம் உள்பட 491 ரன்கள் குவித்துள்ளார். எனவே இன்று அவரது விக்கெட்டை எடுப்பதில்தான் பெங்களூரு பவுலர்கள் குறியாக இருப்பர். தேவ்தத் படிக்கல், கேப்டன் சஞ்சுசாம்சன், ஹெட்மயர் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (18 விக்கெட்), அஸ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா மிரட்டுகின்றனர்.
பெங்களூர் அணியும் 8 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது. பெங்களூர் அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த சீசனில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லி தொடர்ந்து 2 ஆட்டங்களில் ‘டக்-அவுட்’ ஆகி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார். எனவே இந்த போட்டியில் அவர் கூடுதல் கவனமுடன் ஆட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவரது இடத்திற்கு ஆபத்து வரலாம். கேப்டன் டுபிளசிஸ், மேக்ஸ்வெல், தினேஷ்கார்த்திக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்றும் இவர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ஸ்கோர் எடுத்தால்தான் ராஜஸ்தானுக்கு கடும் சவால் அளிக்க முடியும். அதே நேரத்தில் ஏற்கனவே தொடக்க லீக் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்த ராஜஸ்தான் இன்று அதற்கு பழிதீர்த்துக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment