ஒரு சேலஞ்சும் இல்லாத ராயல் சேலஞ்சர்ஸ்- ‘பேக் டு ஃபார்ம்’- பந்தாடிய ராஜஸ்தான்


ஒரு சேலஞ்சும் இல்லாத ராயல் சேலஞ்சர்ஸ்- ‘பேக் டு ஃபார்ம்’- பந்தாடிய ராஜஸ்தான்


புனேயில் நேற்று நடைபெற்ற 39வது ஐபில் டி20 லீக் ஆட்டத்தில் சில வெற்றிகளுக்குப் பிறகு பழைய பார்முக்குத் திரும்பிய ஆர்சிபி அணி 145 ரன்கள் வெற்றி இலக்கைக் கூட விரட்ட முடியாமல், குல்தீப் சென் (4/20), அஸ்வின் (3/17), பிரசீத் கிருஷ்ணா (2/23) ஆகியோரது அதிரடிப் பந்து வீச்சில் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.

2021 ஐபிஎல் சீசனில் பயங்கரமாக சொதப்பிய ரியான் பராக் என்ற 20 வயது வீரர் நேற்று சமயத்துக்கு ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடி 31 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 ரன்களை எடுக்க 4/68 என்ற நிலையிலிருந்து ராஜஸ்தான் 144 ரன்களை எட்டியது. இது எளிதில் விரட்டப்படக்கூடிய இலக்குதான் .ஆனால் இலக்கற்ற ஆர்சிபிக்கு இது பெரிய இலக்கு.

இதற்கு முன்பாக இதே ஐபிஎல் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் 156 ரன்களை வெற்றிகரமாக தடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் (7) சிராஜிடம் எல்.பி.ஆனார். மீண்டும் அஸ்வினை 3ம் நிலையில் இறக்கி அற்புதமாக அவரைப் பயன்படுத்தினர். பின்னால் இறங்கி பவர் ஹிட்டிங் இவருக்கு சாத்தியமில்லை, பவர் ப்ளேயில் இறக்கி விட்டால் பீல்டர்கள் அருகில் இருக்கும் போது இவரிடம் உள்ள லஷ்மண் தன்மான டைமிங்கில் சோபிக்க வாய்ப்பிருக்கிறது என்று சஞ்சு சாம்சன் அருமையான ஒரு திட்டத்தைக் கடைப்பிடித்தார்.

அஸ்வின் ஏமாற்றவில்லை சிராஜின் 2 ஓவர்களில் 4 பவுண்டரிகளை விளாசி 9 பந்துகளில் 17 என்று ராஜஸ்தான் எஞ்சினுக்கு கரி அள்ளிப்போட்டார். கடைசியில் சிராஜிடமே கொடியேற்றி அவுட் ஆனார். ஆனால் சரியான இடையீடு செய்தார் அஸ்வ்வின்.
இந்த முறை ஜாஸ் பட்லர் மட்டைக்கு லீவு விட்டு விட்டார், ஹேசில்வுட் பந்தை மிட் ஆனில் கேட்ச் கொடுத்து ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். சஞ்சு சாம்சன் இறங்கியவுடன் ஆர்சிபி கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் ஸ்பின்னர் வனிந்து ஹசரங்காவைக் கொண்டு வந்தார். ஹசரங்கவை ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாசினார் சாம்சன்.

பிறகு ஷாபாஸ் அகமட் ஓவரில் 2 சிக்சர்கள் அடித்தார் சஞ்சு. மீண்டும் ஹசரங்கா வந்த போது சாம்சன் 27 ரன்களில் இருமுறை ரிவர்ஸ் ஸ்வீப் முயன்று 2வது ஸ்வீப்பில் பவுல்டு ஆனார். டேரில் மிட்செலுக்கு எதுவும் மாட்டவில்லை, 24 பந்தில் 16 ரன்களையே எடுக்க முடிந்தது. 99/5 என்று இருந்த போது ஹெட்மையருக்கு நல்ல சான்ஸ். ஆனால் அவர் 3 ரன்களில் ஹசரங்காவிடம் வீழ்ந்தார். ரியான் பராக் 31 பந்துகளில்  3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து 56 ரன்கள் அடித்தார். ராயல்ஸ் 144 ரன்கள்.

கோலி ஓபனிங், ஆனால் பிரசித் கிருஷ்ணா ஆக்ரோஷத்தில் சிக்கினார்:

நேற்று கோலி ஓப்பனிங் இறங்கினார், ஆனால் 3வது பந்தில் டக் அவுட் ஆகியிருப்பார், பிளிக்கை தூக்கி அடிக்க ஸ்கொயர் லெக் முன்னால் பந்து விழுந்தது. பிறகு போல்ட்டை ஒரு பவுண்டரி அடித்தார், அடுத்த 2 ஷாட்கள் இன்சைடு எட்ஜில் ஸ்டம்பை உரசிக் கொண்டு சென்றது. பிரசித் கிருஷணாவை அவரால் ஆட முடியவில்லை, 2 பந்துகளை மட்டையில் வாங்கி கால்காப்பில் விட்டுக் கொண்டார்.

பிறகு பிரசித் கிருஷ்ணா உலகின் ஒரு கால நம்பர் 1 கிங் கோலியை ஒர்க் அவுட் செய்து பவுன்சரில் வீழ்த்தினார், ஹூக் ஷாட் சிக்கவில்லை. நடுவர் அவுட் கொடுக்கக் காத்திருக்கவில்லை, தானாகவே வெளியேறினார்.

டுபிளெசிஸ் 4 பவுண்டரிகளை அடித்தார். அப்போதுதான் குல்தீப் சென் வந்தார் வந்தவுடன் அடுத்தடுத்து டுபிளெசிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெலைக் காலி செய்ய ஆர்சிபி 37/3. போதாக்குறைக்கு அஸ்வின், செஹல் மிடில் ஓவர்களில் கிடுக்கிப்பிடி போட ஆர்சிபி க்கு சட்டென 144 என்பது இமாலய இலக்கானது. பவர் ப்ளேவுக்குப் பிறகு 4 ஓவர்களில் 1 பவுண்டரிதான் வந்தது. ரஜத் படிதார் என்பவரை கேரம் பந்தில் அஸ்வின் வீழ்த்தினார்.

கார்த்திக் வந்தார், செஹலை அருமையான ஸ்வீப் பவுண்டரி அடித்தார். ஆனால் சற்றும் எதிர்பாராவிதமாக ஷாபாஸுக்கும் கார்த்திக்கும் புரிதல் இல்லாமல் நடுபிட்ச்சில் முடிந்தார் தினேஷ் கார்த்திக் ரன் அவுட், ஆனால் கொஞ்சம் மந்தமாக ரியாக்ட் செய்தார் கார்த்திக். 72/6லிருந்து கடைசி ஓவர் வரை ஆர்சிபி இழுத்துப் பார்த்தது, ஹசரங்கா 18 ரன்கள் எடுத்தார். ஹர்ஷல் படேல் 8, சிராஜ் 5 என்று வெளியேற 19.3 ஓவர்களில் 115க்கு முடிந்தது ஆர்சிபி. அரைசதம், பிளஸ் 4 அருமையான கேட்ச்களுடன் ரியான் பராக் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Comments

Popular posts from this blog