ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் காயம்!1300752766
ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் காயம்!
ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் 39 பேர் பயணித்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தெற்கு காஷ்மீர் பகுதியின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் என்ற இடத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். இந்நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், இதில் 30க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படியினர் காயமடிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 37 வீரர்கள், ஜம்மு- காஷ்மீர் காவல்துறைக்கு சொந்தமான பேருந்தில் சென்று கொண்டிருந்த பொழுது, திடீரென இயந்திரநுட்ப கோளாறு காரணமாக பிரேக் பிடிக்காததால், வாகனத்தின் கட்டுப்பாட்டை மீறி, அருகில் சென்ற ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பேருந்து அப்பளம் போல் முழுவதுமாக நொறுங்கிய நிலையில், மீட்புப்பணியானது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
39 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், 37 பேர் இந்தோ- திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் என்றும், 2 பேர் ஜம்மு- காஷ்மீர் மாநில காவல்துறையை சேர்ந்தவர்கள் என்றும் ஜம்மு- காஷ்மீர் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புக்குழுவை ஜம்மு போலீசார் அழைத்துள்ளனர். விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் படுகாயமடைந்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில், ஜம்மு- காஷ்மீர் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Post a Comment